ரோஹித் சர்மா அபாரம்: கடைசி ஓவர் திரில்லரில் மும்பை வெற்றி

April 11, 2023

மீண்டும் ஒரு கடைசி ஓவர் திரில்லர்! நாட்கள் செல்ல செல்ல ஐபிஎல் 2023 அட்டகாசமான ஒரு போட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது. வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே தேவை. மும்பைக்கு எளிதான வெற்றி என்று எல்லாரும் நினைத்தனர். ஆனால் நோர்கியாவின் உலகத் தரமான வேகப்பந்து வீச்சு ஆட்டத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது.

ஒரு கட்டத்தில் சூப்பர் ஓவருக்குத் தயாராகத் தொடங்கினார்கள் ரசிகர்கள். கடைசி பந்தில் எப்படியோ தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓடி அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார் டிம் டேவிட். இந்த தொடரின் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடர்ந்து நான்காவது ஆட்டத்திலும் மண்ணைக் கவ்வியது தில்லி கேபிடல்ஸ்.

அருண் ஜெட்லி மைதானத்தில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கைத் தேர்வுசெய்தார். துவக்க வீரர்களாக வார்னரும் பிரித்வி ஷாவும் களமிறங்கினர். கடந்த ஆட்டங்களில் சொதப்பிய பிரித்வி, இன்றைக்கு நம்பிக்கையுடன் ஆடினார். ஆனால் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோகீன் வீசிய குட் லெங்த் பந்தை ஸ்வீப் ஆடி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

மூன்றாவதாக களமிறங்கிய மணிஷ் பாண்டே ஆரம்பத்தில் இருந்தே தைரியமாக ஆடி ரன் சேர்ந்தார். சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை அவர் எதிர்கொண்ட விதம் நன்றாக இருந்தது. மணிஷ் பாண்டே ஆட்டம் இழந்தபிறகு தில்லி அணி சரியான பார்டன்ஷிப் இல்லாமல் திண்டாடியது. பியூஸ் சாவ்லா கறாராக வீசி, ரன் வேகத்தை கட்டுப்படுத்தியதோடு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் தனது வழக்கமான கேப்டன் இன்னிங்ஸை ஆடினார் வார்னர். அவருக்கு ஆல் ரவுண்டர் அக்‌ஷர் படேல் கைகொடுத்தார். அக்‌ஷர் தனது கரியரின் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. கடைசி கட்டத்தில் கொத்தாக விக்கெட்டுகள் சரிய, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது தில்லி அணி.

சுழலலுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் தில்லி நம்பிக்கையுடன் இருந்தது. ரோஹித் சர்மா - இஷான் கிஷன் ஜோடி ஃபார்மில் இல்லை என்பதால் பிரச்சினை இல்லை; மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவை வைத்து தாக்குதல் தொடுக்கலாம் என்பது வார்னரின் திட்டமாக இருந்தது. ஆனால் துவக்கத்திலேயே தில்லியின் திட்டங்களை சுக்கு நூறாக உடைத்து எறிந்தார் ரோஹித் சர்மா.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு விண்டேஜ் ரோஹித் சர்மா இன்னிங்ஸ்! நோர்கியா பந்தில் மிட் விக்கெட்டுக்கு மேல் ரோஹித் அடித்த சிக்ஸரில் சொக்கிப் போனார்கள் ரசிகர்கள். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் தேவையில்லாமல் கிஷான் ரன் அவுட் ஆனார்.

மூன்றாவதாக களமிறங்கிய திலக் வர்மா, தனது கிளாஸை வெளிப்படுத்தினார். அக்‌ஷர் நன்றாக கட்டுக்கோப்பாக வீசினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவ் அடி வாங்கினார். ஒரே ஓவரில் திலக் வர்மா,சூர்யகுமார் யாதவ் இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் முகேஷ் குமார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆனால் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய டிம் டேவிடும் ஆல்ரவுண்டர் கிரீனும் பொறுப்புடன் விளையாடினார்கள்; மும்பையின் முதல் வெற்றியை உறுதிப்படுத்தினார்கள். சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் ரோஹித்தின் ஆடிய பேயாட்டம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிச்சயம் நம்பிக்கையை அளித்திருக்கும். அதேபோல, அக்‌ஷர் படேலின் பேட்டிங்கும் நோர்கியாவின் பவுலிங்கும் தில்லிக்கு ஆறுதல்!

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by Cricday. Source Link