கேப்டன் கையில் இரு பட்டியல்கள்: ஐபிஎல் போட்டியின் புதிய விதிமுறைகள்!

March 29, 2023

ஐபிஎல் 2023 போட்டியில் புதிய விதிமுறைகள், மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

ஐபிஎல்-லில் மட்டுமில்லாமல் எந்த ஒரு ஆட்டத்திலும் வழக்கமாக டாஸுக்கு வரும் கேப்டன்கள் கையுடன் அணியின் பட்டியலையும் கொண்டு வருவார்கள். டாஸில் என்ன நடந்தாலும் கையிலுள்ள அணியின் பட்டியலைத்தான் வழங்க முடியும். சிலசமயம் டாஸ் முடிவு முன்பே தெரிந்திருந்தால் அணியில் மாற்றம் கொண்டு வந்திருக்கலாமே என கேப்டன்களுக்குத் தோன்றுவதுண்டு. அதற்கு ஒரு வழி இப்போது கிடைத்துள்ளது.

ஐபிஎல் 2023 போட்டியில் டாஸுக்கு இரு பட்டியல்களுடன் கேப்டன்கள் வரலாம். டாஸில் வென்றால் ஓர் அணி, டாஸில் தோற்றால் வேறொரு அணி என மாற்றிக்கொள்ளலாம். 10 அணிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள ஐபிஎல் போட்டியின் புதிய விதிமுறை குறித்த தகவலில் இந்த முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் சிறந்த, பொருத்தமான வீரர்களைக் கொண்ட அணியை ஆட்டத்தில் களமிறக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற எஸ்ஏடி20 போட்டியில் இந்த விதிமுறை அமலானது. அடுத்ததாக ஐபிஎல் போட்டியிலும் இந்த விதிமுறை பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் டாஸை வெல்லும் அணிக்குக் கிடைக்கும் சாதகமான அம்சம் குறைக்கப்படும். உதாரணமாக எந்த ஓர் அணியாவது முதலில் பேட்டிங் செய்ய விரும்பி டாஸினால் முதலில் பந்துவீச நேர்ந்தால் அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்துகொள்ளலாம். பிறகு பேட்டிங்கின்போது கூடுதலாக ஒரு பேட்டரை இம்பாக்ட் பிளேயர் விதிமுறையின்படி களமிறக்கலாம்.

இந்த முக்கியமான விதிமுறையைத் தாண்டி மேலும் விதிமுறையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு ஓவரை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டால் அதற்குத் தண்டனையாக வட்டத்தின் வெளியே 4 வீரர்கள் மட்டுமே ஃபீல்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நேரம் கடத்தாமல் ஓவரை முடிக்க வேண்டும் என்கிற நெருக்கடி பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பந்துவீச வரும்போது தேவையில்லாமல் விக்கெட் கீப்பர் நகர்ந்தால், அதற்குத் தண்டனையாக அந்தப் பந்து செல்லாததாக அறிவிக்கப்படும். மேலும் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும். அதேபோல தேவையில்லாமல் ஃபீல்டர் நகர்ந்தாலும் அதற்குத் தண்டனையாக அந்தப் பந்து செல்லாததாக அறிவிக்கப்படும். மேலும் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும்.

ஐபிஎல் 2023 போட்டியில் நோ பால், வைட்களுக்கும் ரெவ்யூ கோரலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்தப் புதிய விதிமுறைகள்.

Disclaimer: This news is auto-aggregated by a computer program and has not been created or edited by Cricday. Source Link